இந்து சமய அறநிலையத்துறை உங்களை காலி செய்யச் சொல்லும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள்! (பதிவு-1)


 இந்து சமய அறநிலையத்துறை உங்களை காலி செய்யச் சொல்லும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள்! (பதிவு-1)

(இந்த தொடர் கட்டுரை சாமானியர்கள் மற்றும் சம்சாரிகளில் குருவிக் கூட்டை பாதுகாப்பதற்காக சாமானியர்களுக்கு HRNCE சட்டம் 78 புரிந்து கொள்ள எழுதுகின்றேன்)

1) சாமானியர்கள் தாங்கள் வசிக்கின்ற வீட்டையும் தங்களின் விவசாய நிலங்களையும் வரமாக மதித்து வாழ்கின்றனர் அவர்கள் பூர்வீகமாகவும் அல்லது கிரைய மூலமாகவோ மேற்படி சொத்தை அடைந்து ஆண்டு அனுபவித்து வருகின்றார்கள்.

2) சாமானியர்களுக்கு மைனர் இனாம் நிலங்கள் என்றால் என்னவென்று தெரியாது தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கட்டளைகள் சட்டம் 1959 பற்றி தெரியாது பத்திரப்பதிவு சட்டத்தைப் பற்றி முழு புரிதல் இருக்காது வருவாய்த்துறை சட்டங்களைப் பற்றி தெளிவு இருக்காது ஏனென்றால் அவர்கள் கடைநிலை வாழ்கின்ற சாமானியர்கள் அப்படிப்பட்ட சாமானியர்கள் தெரிந்தும் தெரியாமலும் அல்லது சில நயவஞ்சகர்களால் ஏமாற்றப்பட்டும் கோயில் நிலங்களை அறியாக்கிரயம் பெற்று இருப்பார்கள்.


3) அப்படி கோவில் நிலங்களை அறியா கிரையம் பெற்று வாழ்கின்ற மக்கள் மின் இணைப்பு எடுத்திருப்பார்கள், குடிநீர் வரிகட்டி இருப்பார்கள், பஞ்சாயத்து வீட்டு வரி கட்டியிருப்பார்கள், டிடிசிபி, சிஎம்டிஏ அங்கீகாரம் கூட வாங்கி இருப்பார்கள், விவசாய கடன் வாங்கி இருப்பார்கள், வீடு கட்டும் கடன் வாங்கி இருப்பார்கள், இப்படி சர்வ சுதந்திர உரிமையை நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் 100 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என்று ஆண்டு கணக்கில் வெள்ளந்தியாய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இது கோயில் நிலம், இது கோயில் சொத்து, இது இறை சொத்து, இதனை நீங்கள் ஆக்கிரமித்து இருக்கிறீர்கள் ஏன் உங்களை இந்த இடத்தில் இருந்து அகற்றக்கூடாது? ஏன் நீங்கள் எங்களுக்கு வாடகை கொடுக்கக் கூடாது? என்பது போன்ற கடிதங்கள் அவர்களுக்கு சார்வு செய்யப்படும். அப்பொழுதுதான் பிரச்சனையின் தீவிரத்தையே இந்த சாமானியர்கள் உணர்வார்கள் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவார்கள், சில நேரங்களில் தூக்கமின்றி நிம்மதி என்று இருப்பார்கள், யாரைப் பிடிப்பது? எப்படி பிடிப்பது? மந்திரியை பார்க்கலாமா? எம்எல்ஏ-வை பார்க்கலாமா? கவுன்சிலரை பார்க்கலாமா? என்று பலரை கூட்டம் கூட்டமாக போய் பார்ப்பார்கள். இப்படி பார்ப்பாளர்களே தவிர இந்து சமய அறநிலையத்துறையினர் கொடுத்த நோட்டீஸிற்கு பதில் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். இந்த நேரத்திலே அடுத்த நோட்டீஸ் வந்துவிடும் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை போய் பார்ப்பார்கள், பேசுவார்கள் ஆனால் சட்டப்படி எதனையுமே செய்திருக்க மாட்டார்கள். தங்களுடைய பிரதிநிதித்துவத்தை எழுத்தால் கொடுத்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு மூன்றாவது நோட்டீஸும் வந்துவிடும் இறுதியில் ஒரு நாள் திடீரென்று நீ இடத்தை காலி செய் நாங்கள் பல சட்ட அறிவிப்புகள் கொடுத்து விட்டோம், நாங்கள் பலமுறை உங்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து விட்டோம். ஆனால் நீங்கள் எதனையும் மதிக்கவில்லை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளான நாங்கள் சட்டப்படி தான் செயல்படுகிறோம். எனவே நீங்கள் இடத்தை காலி செய்யுங்கள் அல்லது எங்களுக்கு சில லட்சம் டெபாசிட் செய்யுங்கள், வாடகைதாரராக வரைமுறைப்படுத்திக் கொள்ளுங்கள். என்று விதவிதமாக நீங்கள் வாழ்ந்து வந்த குருவிக்கூட்டை கலைக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த நேரத்தில்தான் மனம் தளராது தெளிவு கொண்ட எண்ணத்தோடு நாம் எப்படி சட்ட ரீதியாக எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் நமக்கு என்னென்னவெல்லாம் சட்ட வாய்ப்புகள் இருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றிற்கேற்றவாறு காய் நகர்த்துதலை நாம் செய்து நமது பிரச்சனையிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்து நிலையத்துறை சட்டம் நமக்கு சம வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் அதனைப் பற்றி நமக்கு தெளிவாக தெரிவதில்லை எனவே அவர்கள் ஒரு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றால் எப்படி எல்லாம் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்று கீழே பட்டியலிடுகிறேன் எளியவர்களுக்கும் புரிவதற்காக வண்ண படங்களுடன் எளிமையாக இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். இந்து சமய அறநிலையத் துறையினர் உங்களை காலி செய்ய வேண்டும் என்றால் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 78 ன் கீழ் நிர்வாக ரீதியாக அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான சட்ட அதிகாரம் இணை ஆணையர் அவர்களுக்கு இருக்கிறது. அதுபோல நீதிமன்றம் மூலமாகவும் சாமானியர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். இதில் பிரிவு 78 அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனை பட்டியலிட்டு இருக்கின்றேன்.

4) சாமானியர்கள் பிரிவு 78 பற்றி விழிப்பு இல்லாததால் இந்து சமய அறநிலையத்துறை தக்கார்களும், செயல் அலுவலர்களும், உதவி ஆணையர்களும், இணை ஆணையரும் உங்களிடம் பேசுகின்ற உருட்டுகளை எல்லாம் நம்பி பிறகு வெம்பி போய் விடுகிறார்கள். அப்படிப் போகக் கூடாது என்பதற்காக இந்தப் பிரிவு 78 பொறுமையாக படித்திடுங்கள்! இது சம்பந்தமாக சில பதிவுகள் தொடராக இருக்கிறது அதனை மொத்தமாக படித்து விடுங்கள்

-தொடரும்

இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410
#hrnce #Hindu #religious #Charitable #Endowments #Department
#hindureligiousandcharitableendowments

Comments