மூன்று வகை தேவதாய இனாம்கள்
மூன்று வகை தேவதாய இனாம்கள்
1)தற்பொழுது இனாம் நிலச்சிக்கல்களை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் ஒன்றாகிவிட்டது. பல்வேறு வகையான இனாம்கள் இருந்தாலும் சாமானியர்கள் அவதிப்படுவது இந்த தேவதாய் இனம்களில்தான். இந்த தேவதாய இனாம்களில் கோயில்களுக்கும் சாமானியர்களுக்கும் இருக்கின்ற உரிமை சிக்கல்களை புரிந்துகொள்ள தேவதாய இனாம் நிலங்களை பற்றி கண்டிப்பாக சாமானியர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
2)மேற்படி தேவதாய இனம்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்'
1. Lands Granted to the Religious Institution ( மத நிறுவனத்திற்கு வழங்கப்பட்டநிலங்கள்)
2. Lands Intended to a Service to a Particular of service ( ஒரு குறிப்பிட்ட சேவைக்குசேவை செய்ய உத்தேசித்துள்ள நிலங்கள்)
3. Granted to a name individual burdened with service ( சேவை சுமையுடன் ஒரு நபருக்கு வழங்கப்பட்ட நிலம்)
3)இதில் முதல் வகையான இனாம் நிலங்கள் திருக்கோயில்கள் பெயரிலேயே நில ஆவணங்களிலும் அரசு ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். (எ.கா அருள்மிகு மருதீஸ்வரர் கோவில் -திருவான்மியூர், அருள்மிகு சங்கரன்கோவில்)
4)இப்படி நேரடியாகவே கோவில் பெயரிலும், சாமி பெயரிலும் இருக்கும் நிலங்கள் அது ஒரு தனி எஸ்டேட். சர்வ சுதந்திர முழு பாத்தியமும் கோவிலையே சாரும். இந்த இனாம் நிலங்களில் வாழுகின்ற சாமானியர்கள் எந்தவிதமான உரிமை பிரச்சனையிலும் சச்சரவு செய்யவில்லை. அவர்களுக்கு இந்த இனாம் நிலங்களில் வாழுகின்ற மக்களுக்கு வாடகை உயர்வுதான் பிரச்னையாக இருக்கிறது. அதனை தனியாக வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.
5)இரண்டாவது வகை திருக்கோயிலுடன் இணைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பணிக்காக வழங்கப்பட்ட இனாம் நிலங்களாகும். உதாரணமாக பூசாரி, நாதஸ்வரம், மேளம், போன்ற பொறுப்புகளுக்காக திருக்கோவிலின் பெயரில் வழங்கப்பட்ட இனாம் நிலங்களாகும். (eg.நாதஸ்வரம் ஊதுவதற்காக அருள்மிகு மருதீஸ்வரர் கோவில், நாதஸ்வரம் ஊதுவதற்காக அருள்மிகு சங்கரன்கோவில்) மேற்படி ஒரு நாதஸ்வர பணியாளர் வித்வானாக கோயிலில் பணி செய்யும் வரை அவருக்கு கொடுக்கப்பட்ட இனாம் நிலத்தை அனுபவித்துகொள்ள முடியும். அவர் பணிக்காலம் முடிந்தால் அடுத்த விதவான் பெரும்பாலும் அவரின் மகனாகவே வருவார், அதனால் அந்த இனாம் நிலம் தொடர்ந்து அவர்கள் குடும்பத்திலேயே இருக்கும்.
6)அதற்கு மாறாக வேறு குடும்பத்தில் இருந்து நாதஸ்வர வித்வான் அந்த கோவிலுக்கு பணி செய்து வந்தால் அந்த இனாம் நிலம் புதிய வித்வானுக்கு மாறிவிடும். ஆக ஒரு நெய்வேலி டவுன்ஷிப் கல்பாக்கம் டவுன்ஷிப் அங்கு பணிபுரியும் வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை பயன்படுத்திகொள்ளலாம், பணி நிறைவு அடைந்த பிறகு டவுன்ஷிப்பை விட்டு வெளியேறுவதுபோல நாதஸ்வர வித்வான் பொறுப்பில் இருக்கும் வரை அந்த இனாம் நிலத்தை அவர் பயன்படுத்தி கொள்ளலாம். ஆக பணி செய்தால்தான் (ஊழியம் செய்தல்) இனாம் நிலம்! என்று இருந்தது. அது ஏன் என்றால் வித்வான்
7))நாதஸ்வரம் ஊத வந்து விட்டால் பூசாரி அர்ச்சக பணி செய்ய வந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு விளை நெல்கள், தானியங்கள் எப்படி பெறுவது? அதனால் வித்வான்களுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான வாழ்வாதராத்திற்கு ஒரு விளை நிலத்தை இனாமாக கொடுத்துவிட்டால் அவர்கள்பாட்டுக்கு வந்து திருக்கோவிலில் பணி செய்து கொண்டு இருப்பார்கள்.
8))அதுவே அதே நாதஸ்வரம் ஊதுபவருக்கு, அர்ச்சகருக்கு ஊழியம் செய்வதற்காக இனாம் நிலத்தை நிரந்தரமாக கொடுத்துவிட்டால் கண்டிப்பாக கொஞ்ச நாளில் அந்த ஊழியன் கோயிலில் ஊழியம் செய்ய வரமாட்டார்கள். அதனால் நான் கோயில் எப்பொழுதும் இனாம் நிலத்தின் டைட்டில் உரிமையை தானே வைத்துகொள்ளுகிறது, அனுபோக உரிமையை மட்டும், ஊழியனுக்கு கொடுக்கும், இப்படி இனாம் நிலம் கொடுக்கும் பொழுது வேலை செய்யும் வரை என்ற அந்த கண்டிசன் அந்த இனாம் ஆவணத்தில் எழுதப்பட்டு இருக்கும். (As long as he render naathasvaram service in the temple we can enjoying the inam land) TO எழுதப்பட்டு இருக்கும்.
9))உதாரணமாக: மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் முருகன் சாமிக்கு சாமிதூக்குகின்ற ஊழியர்கள் பரம்பரை பரம்பரையாக இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் ஏக்கர் கணக்கில் நிலங்களை இதே கண்டிசனுடன் இனாமாக கொடுத்து இருக்கிறார்கள். மேற்படி நிலங்களில் தற்பொழுது இந்து அறநிலையத்துறை மேற்படி நிலங்களில் உள்ள ரெவென்யூ பதிவேடுகளில் சாமி தூக்கும் ஊழியர்களின் பெயர்களை நீக்க சொல்லி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பிராது கொடுத்துள்ளது. அதில் அவர்கள் சொல்லுகின்ற விசயம் என்னவென்றால் சாமி தூக்கும் நபர்களாகிய 8, 8 கரை 16 கரை சேர்ந்த செங்குந்த முதலியார்கள் சாமிதூக்குவதை நிறுத்திவிட்டார்கள் அதனால் நிலத்தின் முழு உரிமையும் கோவிலுக்கே திரும்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை பிரச்சனை செய்துகொண்டிருப்பதை என்னுடைய கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
10) மூன்றாவது வகை இனாம் பெரும்பாலும் தனிநபர் பெயரிலேயே இருக்கும். கோயில் பெயரே இருக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தர்மகாரியத்திற்காக அதுவும் கோயிலோடு சம்பந்தப்பட்ட காரியத்திற்காக கொடுக்கப்பட்டு இருக்கும்.
உதாரணமாக : பட்டுகோட்டையிலுருந்து இராமேஸ்வரம் செல்வதற்கானபாதையில் நிறைய நிலங்கள் சத்திர இனாம்களாக இருக்கிறது. அதேபோல் பாண்டிச்சேரியிலுருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் காசிப்பாட்டை என்று இன்றளவும் அழைக்கக்கூடிய பாட்டைகள் உண்டு அவை இராமேஸ்வரத்திலிருந்து கிழக்கு கடற்கரையோரமாக பாண்டிச்சேரி சென்னை என்று ஒரிசாவில் உள்ள பூரி ஜகன்னாதர் கோவிலுக்கு சென்று அங்கிருந்து காசிக்கு போவார்கள். இப்படி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஆன்மீகஸ்தலங்களுக்கு செல்லும் பாதையில் நிறைய சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள் அமைத்து அன்னதானம், தண்ணீர் தானம், தங்கும் இடம் போன்றவற்றை கொடுப்பார்கள். அதற்கு அரசர்கள் அந்த நிலத்தை தனிப்பட்ட நபர் பெயருக்கு இனாமாக கொடுத்துவிடுவார்கள்.
11)அந்த இனாம் பெற்ற நபர் அந்த இனாம் நிலத்தை உழுது தானும் வாழ்ந்துகொண்டு சொல்லப்பட்ட தான தர்மத்தை செய்ய வேண்டும். உதாரணமாக: நந்தவனம் என்ற இனாம் உண்டு. அதில் பூ மரங்கள் வளர்த்து அந்த மலர்களை சாமிக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். அதற்கு "மாலைகட்டி" இனாம் என்று பெயர். இதனை நந்தவன இனாம் என்றும் சொல்வார்கள். அந்த இனாம் நிலங்களை சில கோயில்களில் கோயிலை விட்டு வேறு கிராமத்திலும் இருக்கும். அப்படி இருக்கும் பொழுதும் அது கோவிலுக்கு பாத்தியப்பட்டதுதான். அதேபோல் தண்ணீர்பந்தல், அன்னசத்திரம் எல்லாம் கோயிலை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும் கோயிலை நடத்தும் நோக்கிற்கு உதவி புரிகின்றன அதனால் அவைகள் எல்லாம் தேவதாயத்திற்கு கீழே வருகின்ற தர்மதாய நிலங்கள் ஆகும். இத்தகைய இனாம்கள் தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. இது தனிநபர்கள் பெயரில் இருந்தாலும் அந்த சேவை இவர்களை கட்டுப்படுத்தும். (burdened with service)
12)இப்படி மூன்று வகையான தேவதாய இனாம்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம். அதில் முதல் வகை நேரடி கோயில் உடையது. அதில் ஆதியில் இருந்து மேல்வாரம்! கீழ்வாரம்! இருவார உரிமையும் கோயிலே வைத்துகொள்கிறது . அதாவது அனுபோகத்தையும், டைட்டிலையும் வைத்து இருக்கிறது என்று சொல்லலாம். அதில் இன்றைய சம்சாரிகளுக்கும் கோயில் சார்ந்த அறநிலைய துறையினருக்கும் எந்தவிதமான உரிமை சச்சரவும் கிடையாது. அங்கு வாடகை, குத்தகை இருப்பவர்களுக்கு வாடகை உயர்வு, குத்தகை உயர்வு போன்ற சச்சரவுகள்தான் அதிகம்.
13)அடுத்ததாக இருப்பது ஊழிய மானியமான பூசாரி, நாதஸ்வர வித்வான் போன்ற கோயில் பணி செய்கின்ற கோயில் ஊழியர்கள் பெயர் போட்டு கொடுக்கப்படுகின்ற இனாம், இதில் டைட்டில் கோயிலிடம் இருக்கும். அனுபோகம் மட்டும் மேற்படி தனிநபர்களிடம் இருக்கும். இந்த தனிநபர்கள் பெயரில் இருப்பவை அவர்கள் பலருக்கு விற்று விடுகிறார்கள். அந்த காலத்திலேயே மேற்படி தனிநபர்கள் இது HRNCE க்கு சம்பந்தம் இல்லை என்று தீர்ப்பு வாங்கிவிடுவார்கள். அல்லது தங்களுடைய அனுபோக உரிமையின்படி UDR நடக்கும்பொழுது தனிநபர்கள் பெயர் மட்டும் ஏறிவிடும் அதனை பயன்படுத்தி சொத்து பூர்வீகமாக வந்தது என்று சொல்லலி வேறு ஒரு சம்சாரிகளுக்கு விற்றுவிடுவார்கள். இப்படி இந்த இனாம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதனுடைய வேலையை நிறைவேற்றாமல் அடுத்து அடுத்து இனாம் சொத்துக்கள் சம்சாரிகள் தலையில் கட்டப்பட்டது அல்லது அவர்களுக்கு சட்டம் தெரியாமலயே அதனை கிரயம் வாங்கிவிட்டனர்.
14)இதே போலதான் 3வது வகையாக இருக்கும் தனிநபர் பெயரில் உள்ள தர்மதாய நிலங்கள் ஆகும். இதுவும் மேலே சொன்னது போல் அப்பாவி சம்சாரிகள் தெரிந்தும் தெரியாமல் வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.
15)இப்படி 2வது வகையான தனிநபர் பெயரில் உள்ள தேவதாய ஊழிய இனாம்கள் தனிநபர் பெயரில் உள்ள தர்மதாய இனாம்கள் தமிழகத்தில் சற்றேக்குறைய 27,585,60 ஏக்கர் (இருபத்து ஏழாயிரத்து ஐநூற்று எண்பத்தைந்து அரை ஏக்கர்)
நிலங்கள் இருக்கிறது. இதில் பழைய கோவை, பழைய ஈரோடு, பழைய திருச்சி மாவட்டங்களில் மட்டும் 22,723.83 ஏக்கர் (இருபத்து இரண்டாயிரத்து எழுநூற்று இருபத்து மூன்று ஏக்கர். எண்பத்தைந்து செண்ட் நிலம்) இருக்கிறது என்று → கணக்கிடப்பட்டுள்ளது. (அரசாணை நிலை எண் 90-3.2.87 (வணிகவரி & அறநிலையத்துறை)
16)இவையெல்லாம் பெரும்பாலும் புன்செய் நிலங்களாகத்தான் இருந்தது ஆனால் அரசின் நீர்பாசன திட்டங்களான "பரம்பிகுளம் ஆழியாறு திட்டம்" "அப்பர்கனால் திட்டம்" போன்றவற்றால் நஞ்சை நிலமாக மாறி இருக்கிறது.
17)தற்போது இந்து அறநிலையத்துறை, வக்ப்போர்டு, வருவாய்த்துறை, பூமிதான போர்டு, நிலசீர்திருத்தத்துறை, நகர நிலவரி திட்டத்துறை, பொதுப்பணித்துறை போன்ற அரசு நிறுவனங்கள், தங்கள் நிலங்களை கணக்கெடுப்பது, அதன் ஆவணங்களை பதிவுதுறையிலும், வருவாய்துறையிலும் உள்ள பதிவேட்டுகளில் சரிசெய்வது, தேவைப்பட்டால் நீதிமன்றம் நாடி பரிகாரம் தேடுவதும் என்று இருக்கிறார்கள்.
18)இதுமட்டும் இல்லாமல் சம்சாரிகள், விவசாயிகள் மேற்படி நிலத்தில் விவசாயம் செய்துவந்தால், வாழ்ந்து வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக நிலத்திலிருந்து வெளியேற்றுகின்ற வேலையை செய்துகொண்டு இருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல மேற்சொன்ன அரசு துறைகள் புதிய புதிய சட்டங்களையும், சட்ட திருத்தங்களையும் மேற்கொண்டு நிலங்களுக்கு தேவையான FLL அதிகாரங்களை அதிகப்படுத்தி கொள்கின்றனர். அப்படி தங்களுக்கு அதிக சட்ட வலிமையை ஏற்றிகொண்ட ஒரு அமைப்புதான் இந்து அறநிலையத்துறை.
19)ஆனால் மக்களோ அதிக சட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் அதிகார மையங்கள் சட்டங்களை புதியதாக உருவாக்கி, இருக்கின்ற சட்டங்களை திருத்தி என்னென்னவெல்லாம் சாமானியர்களுக்கு எதிராக இருக்கிறதோ அவற்றையெல்லாம் அரசு எந்திரத்தில் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். இதனையெல்லாம் தெரியாமலேயே சாமானியன் தான்உண்டு தன் வீடு என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.
20)இந்த நிலையில் HRNCE அதிகாரிகள் நீ இருக்கின்ற வீடும், நிலமும், உன்னுடையது இல்லை! வெளியேறு என்று நோட்டீஸ் கொடுக்கும் பொழுதுதான் அந்த சாமானியனுக்கு புரிகின்றது நாம் இவ்வளவு நாள் தூங்கி விட்டோமே" என்று இப்பொழுது மக்கள் திரள் போராட்டங்கள் செய்து கொண்டு இருப்பதை பார்க்கின்றோம்.
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிகாலம் மக்கள் நல அறக்கட்டளை
See less

Comments
Post a Comment