ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

  ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

பொன்னான எதிர்காலத்தை அனைத்து தரப்பு மக்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் நூலின் அட்டை பக்க தலைப்பெழுத்தின் பொன்னெழுத்துக்களில் வெளிப்படுவதாய் உணர்கிறேன். தலைப்பும், அதன் எழுத்தின் வடிவமும், வண்ணமும், தாளின் தரமும் சிறப்பு!

மேலும், இந்த நூலினை அப்படியே தங்களின் ஆசிரியருக்காக அர்ப்பணித்தது இன்னும் போற்றுதலுக்குரியது. ஒரு சொத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது அதன் ஆவணங்களை முறைப்படுத்திடவோ இக்காலகட்டத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு தெளிவுபடுத்தியதோடல்லாமல் அதனை களைந்திட சீர்மிகு தீர்வுகளையும், சிறந்த நெறிமுறைகளையும், மிக நேர்த்தியுடன் வழங்கியுள்ளீர்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய் மேற்படி பிரச்சனைகளின் தொடக்கத்தை பல கோணங்களில் கூராய்வு செய்து அதனை மக்கள் மற்றும் அரசு என இரு தரப்பிலும் சீரமைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை தொகுத்ததன் மூலம் தங்களின் அனுபவம் ஆழ்ந்தகன்றது என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளீர்கள்.
இந்நூலின் மூலம் நிலத்தின் / சொத்தின் பயனை அடையும் மக்களுக்கு, நம்மிடம் உள்ள சொத்தில் என்ன இருக்கிறது? எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும்? யாரை, எப்படி அணுகுவது? போன்ற பல கேள்விகளுக்கான தீர்வுகளையும் மிகவும் நேர்த்தியாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ள விதம் மிகவும் சிறப்பு. மொத்தத்தில் நிலம் / சொத்து தொடர்பான எளிதில் விடைதெரியாத புதிர் போன்ற பல கேள்விகளுக்கு பாமரனிலிருந்து, படித்தவர் வரை தெளிவு பெறும் வகையில் அற்புதமான நூலாய் அமைந்துள்ளது.
புத்தகம் பற்றிய விமர்சனம்
தொகுதி 1, 2 மற்றும் 3ல் அன்றாடம் மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளையும், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
குறிப்பாக, சொத்துக்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய செய்திகளையும், பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் விளக்கியவிதம் அருமை. பத்திரத்தில் வரக்கூடிய பிரச்சனைகள், பட்டாவில் வரக்கூடிய பிரச்சனைகள், சார்பதிவகங்களில் வரக்கூடிய பிரச்சனைகள், பெண்களுக்கான சொத்துரிமை குறித்த விளக்கங்கள், பஞ்சமி நிலம் குறித்த விரிவான அலசல்கள், பூமிதான இயக்கம் பற்றிய செய்திகள், நில ஆக்கிரமிப்பு மற்றும் வேலித்தகராறு போன்ற நடைமுறைச் சிக்கல்கள், மனைப்பிரிவு வாங்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்திகள், அரசு இடங்களைப் பற்றிய விளக்கமான தொகுப்புரைகள், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஆலோசனைகள், அடுக்குமாடி குடியிருப்போருக்கான பயனுள்ள செய்திகள், நிலமே இல்லாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், மேற்கண்ட விரச்சனைகள் இருந்தால் அதை தீர்க்க வேண்டி சிறந்த மனுக்களின் மூலம் அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய விதங்கள் போன்றவை விரிவாக எடுத்துரைத்திருப்பது சிறப்பு.
மேலும் புரமோட்டர்களிடம தெளிவான பேச்சுவார்த்தை இல்லையெனில் பிறகு "காவடி எடுக்க வேண்டும்" என்பதிலும், "அரசாங்க அலுவலர்களுக்கு முத்திரைத்தாளும், காந்திபடம் போட்ட தாளும்தான்" கணக்கு என்பதிலும், மனைப்பிரிவு உரிமையாளருக்கு "காசு! பணம்! துட்டு! மணி!" என்ற பாடல் ரீங்காரமிடும் என்ற வரிகளிலும் மற்றும் "விக்கிரமாதித்தனின் கதையில்" வரும் சோதனை போன்றவற்றிலிருந்து தங்களின் பொதுமக்கள் மீதான அக்கறையும், எதார்த்தமான மனதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
தொகுதி 4ல் அரசால் ஏற்படுகின்ற ஒவ்வொரு விதமான பிரச்சனைகளையும், அவற்றை மக்கள் எப்படி பக்குவமாக கையாள வேண்டும்? என்கிற பல துறைகளுக்கான (வருவாய்த்துறை, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உட்பட) படிவங்களையும் இணைத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு துறைக்கான மனுக்களின் மாதிரிகளை சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள். கிராம நத்தம், நில உச்சவரம்பு பற்றிய விளக்கங்கள் மிகுந்த பயனளிப்பவை. அவற்றின் மேலதிகமாய் அரசு இயந்திரம் செவிசாய்க்க மறுக்கிறது எனில் அதை தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்னும் ஆயுதத்தால் முடிக்க முடியும் என்பதையும் சிறப்பாக விவரித்துள்ளீர்கள். மேலும் போர்ஜரி மற்றும் இரட்டை ஆவண குளறுபடிகளை தடுப்பதற்கான வழிமுறைகள் பயனுள்ளவை (பலர் மன எழுத தெரியாமல், அரசு அலுவலக வாசல்களில் ஒரு மனுவினை எழுத்தித்தர பெற ரூபாய் 75 முதல் 100 வரை செலவிட்டு கொண்டிருக்கிறார்கள்) நீங்கள் ஒரு களஞ்சியமாக பல்வேறு வகையான மனுக்களை வழங்கியுள்ளது சிறப்பு.
தொகுதி 5ல் உளவியல் தொடர்பான தங்களது கட்டுரை மிகச் சிறந்த ஒரு நீண்டதொரு ஆராய்ச்சியின் வடிவமாக தெரிகிறது. என்னதான் சட்ட திட்டங்களால் பிரச்சனைகளை தீர்க்க அரசு முயன்றாலும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க இயலாது என்பதை தங்களது உளவியல் கட்டுரை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறது. "யார் என்ன சொன்னாலும், நீங்கள் தீர ஆராய்ந்து சரி என பட்டால் மட்டுமே முடிவெடுக்க வேண்டும்" என்றும்; தாங்கள் "திரிசங்கு சொர்க்கத்தை" பார்த்த கதையையும், "எவ்வளவு பெரிய அறிவாற்றல் உடைய நபர்களும், மிகப் பெரிய ஆளுமைகளும் உணர்ச்சிவசப்பட்டால் சமநிலையை இழக்கும்போது முடிவுகள் தவறாகும்" என்பன போன்ற தத்துவ வரிகள் இன்றைய உலகின் யதார்த்தமான நிகழ்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
மேலும் வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு இங்குள்ள பிரச்சனைகளை மிக விரிவாகவும், தெளிவாகவும் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல்; குடும்பங்களில் அம்பானியின் தாய்போல் குணமான நல்ல தாய் இருந்தால் பல பிரச்சனைகள் குறையும் என்பதும், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் உறவுகளை கையாள வேண்டிய விதம் பற்றி விளக்கியது, அயல்நாடு வாழ் இந்தியர்கள் மீதான தங்களுக்குள்ள அக்கறையை காட்டுகிறது. மேலும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் "சம்பாதிப்பது ஒரு இடம், சேமிப்பது மற்றொரு இடம்" என்று வெளியே தெரியாமல் இருப்பது அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கும் என்ற கருத்தியல் உயிரோட்டமான வரிகள்.
ஆவணங்களை முறைப்படுத்தாத சொத்துக்களை உடையவர்கள் அரசின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படும்போது அல்லது அரசின் பலன்களை அடைய வேண்டும் என்கிறபோது "கால்களில் வெந்நீர் ஊற்றிக்கொண்டு ஆவணங்களை சீர்படுத்த அரசுடன் சண்டையிடுவது" போன்ற சம்மட்டியடியான நிகழ்வுகளையும்; அப்போது ஏற்படும் வலியை போக்க அவர்கள் கொடுக்கின்ற விலை "சுண்டைக்காய் சுமைக்கூலி" பழமொழியின் மூலம் விவரித்தவிதம் மிகவும் அருமை,

தொகுதி 5 இல் தாங்கள் ஒரு சிறந்த உளவியல் மருத்துவராக மாறி சொத்துக்களை பிரச்சனை இல்லாமல் கையாளுவதற்காக தாங்கள் கூறியுள்ள சொற்பதங்கள் அனைத்தும் அனுமருந்தாக மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்குபவை என்றால் அது மிகையல்ல குறிப்பாக அன்பு என்பது கட்டுப்படுத்துவது அல்ல சுதந்திரமளிப்பது ஒவ்வொரு மனிதரின் கடந்த கால எதிர்மறை / நல்ல எண்ணங்கள் & அனுபவங்களின் தாக்கம் நிகழ்காலத்தில் பிரதிபலிக்கும் என்பதற்கான தத்துவம் முத்தான வரிகள் மேலும் அனுப்பு வட்டம் தொழல் வட்டம் சமூக வட்டம் இவற்றையெல்லாம் தாண்டி இறுதியில் உலக மக்கள் நலம் என்ற ஒற்றை வார்த்தை தாங்கள் இவ்வுலகத்தை நேசிக்கும் நேர்வாக நிமிர்ந்தெழுகிறது தொகுதி 6 ல் சில பிரச்சனைகள் தனி மனித வரம்புக்கு உட்பட்டவை அவைகளை பாதிக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் சரி செய்து கொள்ள இயலுமென்று சில குறிப்பிட்ட பிரச்சனைகளை அரசின் கொள்கை முடிவுகளால் மட்டுமே தீர்க்க இயலும் என்றும் அவற்றிகாக நாம் அமைப்பு சார்ந்த போராட்டங்களினால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மிக அற்புதமாக விளக்கியுள்ளார் (தங்கள் செய்யாததை சங்கம் செய்யும் என்பவை அழுத்தமான வரிகள்)

தனிப்பட்ட எனது சொந்த கருத்துக்கள்:

  1. பஞ்சமி நிலம் பற்றிய கட்டுரைகள் சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கும் வேறொரு நீதி எனில் அது சரித்திரம் அன்று சதியென்று கண்டோம்,சாதிகள் இல்லையடி பாப்பா, வெள்ளை நிறத்தொரு பூனை என்ற கவிதைகள் மூலம் சாதி முறையை மிகக் கடுமையாக எதிர்த்த பாரதியை வஞ்சப் புகழ்ச்சியாக விமர்சித்தது ஏன் எனத் தெரியவில்லை
  2. அயோத்திதாச பண்டிதர் 1892 ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோரிக்கைக்கான பஞ்சமி நிலம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது
  3. இறப்பு சான்று தொடர்பாக தாங்கள் கூறிய கருத்துக்களில் தொகுதி 6(2)ல் ஒருவர் இறந்தால் உடனடியாக பதியும் தேர்வுகளில் (கிராமங்களில்) விஏஒ ஒரு பிறப்பு இறப்பு பதிவாளர் என்ற அடிப்படையில் அவர் கையொப்பமிட்ட இறப்புச் சான்று ஆன்லைனில் கிடைக்கிறது RI தாசிதார் போன்றோர்களுக்கான முன்னெடுப்பும் விசாரணையும் தேவையில்லை
  4. நமது தமிழகத்தின் நிலச்சீர்திருத்த வரலாறு ஆண்டு வாரியாக மிகச் சிறப்பான முறையில் கூறிய தங்கள் தொகுதி 3ல் 14/11/1980 அன்று கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டு கிராம முன்சீப் & கர்ணம் பதவி ஒழிக்கப்பட்டு act (3/81) 1981 யை 1985 என்று குறிப்பிட்டது ஏன்? எனத் தெரியவில்லை

சம்பல் பள்ளத்தாக்கில் காணமல்போன பிரச்சனையில் இந்திய சாட்சிய சட்டம் 108 ன் படி ஒருவர் காணமல் போனால் அவர் காணமல் போன தேதியில் போலீஸ் FIR பதிவு இருந்து ஏழு ஆண்டுகள் கழித்து மேற்படி நபர் சொத்துக்களை காணமல் போனார் என்று சான்றின் அடிப்படையில் சொத்து பரிமாற்றம் செய்யலாம் என தாங்களும் 530 பக்கம் (எண் 13ல்) தெரிவித்துள்ளீர்கள் இருந்த போதிலும் மேற்படி பிரச்சனை ஏன் கிடப்பிலேயே இருக்கிறது என நீங்கள் தெரிவித்துள்ளீர்கள்

இவற்றோடு மேலதிகமாக எனக்குத் தெரிந்தவரை நமது புத்தகத்தில் செய்ய வேண்டிய மாறுதல்களை (இன்னும் மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் சுட்டிக்காட்டும் குட்டிக் குறைகள் கொட்டிக் கொடுக்கும் கோடி நன்மைகள் என்ற கொள்கையின்படியும் சிறிய தவறுகள் திருத்தப்படாவிட்டால் பெரிய இலக்குகளை அடைய முடியாது என்ற கருத்தலின் படியும்) அச்சுப் பிழை சொற்பிழை மற்றும் பொருட்பிழை ஆகியவற்றை அட்டவணைப்படுத்தியுள்ளேன் இவற்றுள் ஏற்றதை ஆற்றுக

மொத்தத்தில் இந்த புத்தகம் அனைவரிடம் இருக்க வேண்டிய புத்தகம் என்பது புலனாகிறது ஏனெனில் இந்த புத்தகம் இருக்கும் போது அதன் மூலம் அவர்கள் பெரும் விழிப்புணர்ச்சியின் அடிப்படையில் தான் திருந்த உலகம் தானே திருந்தும் என்ற தத்துவத்தின்படி தங்களது உன்னதமான நோக்கமான நிலத்தின் பயன் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை

தங்களை பாவெல் என உருவப்படுத்தி கொண்டுள்ளதை அறிந்தேன் (அந்த காவியம் நான் படிக்கவில்லை) அதனால் என்னைப் பொறுத்தவரை தாங்கள் தனிப்போரளி தஸ்ரத் மாஞ்சி என்று உணர்கிறேன்

இப்படிக்கு நிலத்தை நேசிக்கும்

மணிவேல்

#paranjothipandian #nilam_ungal_ethirkalam #book #order #author #trainer #writer #consulting #review

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்