உயில் சொத்தா? கவனிக்க வேண்டிய 35 செய்திகள் ….

fe87b7c5fe899a76a2e55005612250e6

1. ஒருவர் தன் வாழ்நாளுக்குப் பின்னர் அவரின் சொத்துக்களை, உயில் மூலம் அவர் விரும்பும் நபருக்கு எழுதிக் கொடுக்கலாம்.

2. இந்து & கிறிஸ்த்துவ மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது.

3. முகமதிய சட்டத்தில் ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லமால் செய்யும்படி உயில் எழுத முடியாது. சொத்தை வைத்து இருப்பவர் அந்த சொத்தில் 3 ல் 1 பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம். ஆனால் அதற்கும் வாரிசுகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதனால் பொதுவாக முகமதியர்கள் உயில் எழுத முடியாது என்றே கொள்ள வேண்டும்.

4. உயில், எழுதி வைத்தவரின் ஆயுட் காலத்திற்குப் பின்னர் தான் அமலுக்கு வரும். உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் அவர் இறக்கும் வரை நடைமுறைக்கு வராது.

5. ஒருவர் ஒரே ஒரு உயிலைத் தான் எழுதி வைக்க முடியும். அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், இறுதியாக எழுதி வைத்த உயில் தான் செல்லும். மற்ற உயில்கள் செல்லாது போய்விடும்.

6. உயில்களின் எல்லா பக்கத்திலும் உயில் எழுதுபவர் கையெழுத்து போட்டு இருக்க வேண்டும். கடைசிப் பக்கத்தில் உயில் எழுதுபவர் கையெழுத்திற்கு கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் கையெழுத்துப் போட வேண்டும்.

7. இரண்டு சாட்சிகளும் அந்த உயிலை எழுதியவர், போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்சிகளும் உயிலில் கையெழுத்துப் போட்டு இருக்க வேண்டும்.

8. சாட்சிகள் நாணயமில்லாதவராக, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்கக் கூடாது. உண்மையான , பொதுவான நபராக , உயில் எழுதும் நபரை விட மிகவும் வயதில் இளையவராக இருத்தல் நல்லது.

9. சாட்சிகள் நிரந்தர விலாசத்தில் இல்லாதவராக, தூர தேசம் செல்பவராக தேர்ந்தெடுக்கக் கூடாது. எதிர்காலத்தில் அவர்கள்தான் உயிலை உறுதி செய்பவர்கள் அவர்களை தேர்வு செய்யும் போது அதிக கவனம் வேண்டும்.

10. உயிலின் சாட்சியாக இருப்பவர் உயிலின் பலனை அடைபவராக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நிச்சயம் உயில் செல்லாது.

11. உயில் மகளுக்கு எழுதப்பட்டால், சாட்சியாக மகன்களை போட கூடாது. அப்போது மகன் ஒத்துக் கொண்டாலும் , உயில் எழுதியவர் இறந்தப் பிறகு அவர் பிறழ்ந்து விட வாய்ப்பு இருக்கிறது. சாட்சிகள் இரத்த உறவு இல்லாதவராக இருக்க வேண்டும்.

12. உயில்கள் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அப்படி பதிவு செய்தால் அதனுடைய உண்மைத் தன்மை மிகவும் வலுப்பெறும்

13. இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயின்ட் உயில் (JOINT WILL) என்று பெயர். கணவரும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை கூட்டாக ஒரே உயில் எழுதி யாருக்காவது கொடுத்தால் அது (JOINT WILL).ஜாயின்ட் உயில்

14. கணவரின் சொத்து மனைவிக்கும், மனைவியின் சொத்து கணவருக்கும் போய் சேரும் என்று உயிலில் கணவன் மனைவி இருவரும் எழுதி கொண்டால் அது ( MUTUAL WILL) மியூச்சுவல் உயில் ஆகும்.

15. மியூச்சுவல் உயில், ஜாயின்ட் உயில் என்று எழுதுவது எதிர்காலத்தில் மிகவும் குழப்பங்களை உருவாக்கும். ஒருவர் இறந்து மற்றவர் இறக்காமல் இருக்கும் பொழுது மேற்படி உயிலை அவர்கள் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது.

16. உயில் எழுதும் போது தனி தனியே உயில் எழுதி கொள்வது சிறந்தது. கூட்டாக எழுதுவது அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு அதிக சிக்கல்களை உருவாக்கி விடும்.

17. உயில்களில் எக்சிகியூட்டர்களை அதாவது நிறைவேற்றுபவர்களை நியமித்து இருப்பர், அதாவது உயில் எழுதுபவர் இறந்தப் பின் இந்த உயிலில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்து கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பர். அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor ) என்பர்.

18. எக்சிகியூட்டர் தான் அந்த உயிலுக்கு அதிகாரி, இறந்தவர்களின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது. உயிலில் ஒரு எக்சிகியூட்டரோ அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களோ இருக்கலாம்.

19. ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விருப்பம் இல்லமால் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும் மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையை கூட்டாகவும், தனி தனியாகவும் செய்வர். அவை மேற்படி உயிலில் தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்.

20. எக்சிகியூட்டர் இல்லாமலும் உயில்களை எழுதலாம். அது உயில் எழுதுபவர் விருப்பத்தை பொறுத்தது.

21. எக்சிகியூட்டர் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். எக்சிகியூட்டர் நியமிக்கபடாத உயில்களில் இறந்தவரின் வாரிசுகளில் யாராவது ஒருவர் மனு செய்ய வேண்டும்.

22. சொத்துக்கள் வாங்கும்போது உயில் எழுதி விட்டுப் போன சொத்துக்களா, உயில் எழுதாமல் விட்டுப்போன சொத்துக்களா என கவனித்து வாங்க வேண்டும்.

23. கிரைய பத்திரங்களில் Died Intestate ( உயில் இல்லாமல் இறந்தவர்) Testator ( உயிலுடன் இறந்தவர் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

24. உயிலை, கையிலோ, டைப்பிரேட்டிங்கிலோ, (அ) கம்ப்யூட்டரிலோ டைப் செய்து அனைத்து விளக்கங்களும் கொடுத்து தெளிவாக எழுத வேண்டும்.

25. தானம் செட்டில்மெண்டுக்கு பதில் உயிலையும், உயிலுக்கு பதிலாக செட்டில்மெண்டையும் போட்டு பலர் உப்புமா கிண்டுவது போல் பத்திரத்தை கிண்டி வைத்து இருப்பர். மேற்படி பத்திரங்கள் மற்றும் ஜாயின்ட் & மியூச்சுவல் உயில் சொத்துக்கள், சென்னை சிட்டி லிமிட்டுக்குள் இருந்து புரேபேட் ஆகாத உயில் சொத்துக்களை, வாங்கும் போது விவரம் தெரிந்தவர்கள் துணைக்கொண்டு வாங்க வேண்டும்.

26. உயிலை மைனர் கூட எழுதி பதிவு செய்ய முடியும்.

27. உயிலை இரகசியமாக எழுதி முத்திரையிட்ட உரையில் வைத்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க முடியும்.
28. உயிலை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பதியலாம்.

29. நீதிமன்றத்தில் அதிகம் தள்ளுபடி செய்யப்படும் ஆவணமும் உயில்தான்.
30. படுத்த படுக்கையில் கிடக்கும் நோயாளியிடம் ஆஸ்பத்திரியில் எழுதுவது நீதிமன்றத்தில் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

31. எழுதப் படிக்க தெரியாதவரிடம் எழுதி வாங்கப்படும் உயிலும், தமிழ் மட்டும் தெரிந்தவரிடம் ஆங்கிலத்தில் உயில் எழுதி இருந்தாலும் நீதி மன்றத்தில் நீரூபிப்பது கஷ்டம்.

32. மிகவும் வயதானவர், சுயநினைவு தவறியவர்கள் எழுதிவாங்கப்படும் உயில்கள், வயதானவர்களை பராமரிக்கிறேன் என்று வயதானவர்களை கடத்திக் கொண்டு கட்டாயப்படுத்தி எழுதி வாங்கும் உயில்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

33. சென்னையில் உள்ள சொத்துக்களின் உயில் பத்திர அலுவகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதனை சென்னை உயர்நீதி மன்றத்தில் அதன் மெய் தன்மையை ( Probate ) நிருபிக்க வேண்டும். (இது தனி கதை)
34. கிறிஸ்துவ மதத்தினர் உயில் சொத்துக்களை கட்டாயம் Probate செய்ய (மெய்தன்மையயை நிருபிக்க) வேண்டும்.

35. உயில் வழி சொத்துக்களை வாங்கும் போது அவை இறுதியான உயிலா என்று ஆராய்ந்து வாங்க வேண்டும். என் தொழில் அனுபவத்தில் பல சிக்கல்களை இது போன்ற சொத்துக்களால் சந்தித்து உள்ளேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#உயில் #சொத்து #Probate #நீதிமன்றம் #மைனர் #Died #Intestate #சட்டம் #mutual #will #joint-will #minor #property #court #asset #act

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்