என் வாழ்க்கையில் அதிக சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்திய மூன்று துயர சம்பவங்கள் !!

             2000 ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கேத்தியிலுள்ள CSI COLLEGE OF ENGENEERING இல் படித்துகொண்டிருந்தேன். அப்பொழுது நான் தந்தை பெரியாரைப் பற்றியும் சமூக அரசியல் பற்றியும் நிறைய படித்துகொண்டிருந்த மாணவன். சமூகத்தை பற்றிய கவிதை தொகுப்புகளையும் எழுதி புத்தகமாக வெளியிட்டிருந்தேன்.

எப்போதுமே உணர்ச்சி கொந்தளிபுள்ள சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்கின்ற ஒரு ஆளாக என்னை நானே வளர்த்து கொண்டு இருந்தேன் அந்த நேரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1992 – 1996 இல் நடைபெற்ற ஆட்சி கால கட்டத்தில் கொடைக்கானலில் அரசு வரையறை செய்திருக்கும் வளர்ச்சி கட்டுப்பாடு விதிகளை மீறி ஏழு மாடிகள் கொண்ட Pleasant Palsta Hotel க்கு அனுமதி அளித்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அதில் அன்று ஜெயலலிதாவிற்கு எதிராக ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வந்தது அதனுடைய எதிர்வினையாக தருமபுரி இலக்கியம் பட்டியில் கல்லூரி பேருந்தில் மூன்று மாணவிகளை உயிருடன் வைத்து பேருந்தோடு எரித்துவிட்டதாக வேகமாக தகவல் பரவியது. அந்த கல்லூரி மாணவிகள் கோவை வேளாண்மை கல்லூரியை சார்ந்தவர்கள். சுற்றுலா முடித்துவிட்டு அவர்கள் திரும்பிவரும்போது அத் துயரச்சம்பவம் நடைபெற்றது.

பத்திரிகையில் எரிந்த அந்த மூன்று பெண்களின் (ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி) புகைபடத்தை போட்டு தலைப்பு செய்தியாக வந்தன. மேற்படி செய்தி கொங்கு வட்டாரத்தில் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நானும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கல்லூரியை விட்டு வெளியேறி ஊட்டி கலைக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மாணவர் விடுதிகள் தோறும் சென்று சந்தித்து மாணவர்களை ஒருங்கிணைத்து மாணவர் போராட்டம் நடத்துவதற்கு வேகமாக களம் இறங்கி வேலை செய்தேன். ஊட்டியில் இருந்து கோவை க்கு இறங்கி கோவையில் தங்கி பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர் போரட்டங்களில் இணைந்து செயல்பட்டு அந்த பேருந்தில் அந்த பெண்களுடன் பயணித்த மாணவர் அனைவரையும் சந்தித்து காப்பாத்த தெரியாமல் விட்டுவிட்டீர்களே தைரியம் இல்லாமல் மூன்று பெண்களை விட்டு விட்டு ஓடி போயவிட்டீர்களே என்று உணர்ச்சி தூண்டி பேசி மாணவர்களிடையே கொந்தளிப்பை அதிகப்படுத்தினேன்.

தொடர்ந்து பொறியியல் கல்லூரியில் விடுமுறை எடுத்தாலும் என்னுடைய நடவடிக்கைகள் கல்லூரிக்கு எதிராக இருப்பதாகவும் கல்லூரியை விட்டே தற்காலிகமாக நிறுத்தினார்கள். நானும் அதை பற்றி எல்லாம் கவலைபடவில்லை. நாடே மனிதநேயம் இல்லாமல் இருக்கிறது நமக்கு படிப்பு ஒரு கேடா சமூகத்தை திருத்தனும் என்று நினைத்து ஊட்டியில் இருந்து சென்னைக்கு வந்து பழைய மகாபலிபுரம் சாலையில் நண்பர் டேவிட் பெரியார உடன் இணைந்து விடுதலைச் சுடர்கள் பெரியார் சாதி ஒழிப்புபடை இயக்கத்தை கட்டி மூர்க்கமாக வேலை செய்தேன்.

அந்த ரெண்டுங்கெட்டான் வயதில் (Child to adult )ஆக மாறக்கூடிய அந்த காலத்தில் அதிக உணர்வுபூர்வமாக முடிவுகளை எடுப்ஓம் logic ஆக யோசிக்ககூடிய வயது அப்போது கிடையாது. அதனால்தான் அந்த ஒரு துயர சம்பவத்திற்கு பிறகு உடனடியாக கல்லூரிப்படிப்பை நிறுத்தக்கூடிய அளவு முடிவுகளை எடுத்தேன். கொஞ்ச நாள் போன பிறகு கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமே என்று தோன்றியது. Emotional ஆக முடிவெடுத்து கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டேன், அவசரப்பட்டுவிட்டேன் என்று கூட தோன்றியது. சிறிது காலத்திற்கு பிறகு மதுரையில் சரசுகுமார் அண்ணனை சந்தித்தேன் அவரிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்ட போது தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை பேருந்திலேயே வெட்டிக்கொன்ற அந்த சாலையையும், அந்த இடத்தையும் எனக்கு காட்டினர்.

 மேலவளவு சாதியப் படுகொலை என்று அந்த சம்பவம் பேசப்பட்டது. அந்த சம்பவத்தை அவர் கேள்விப்பட்டபிறகு அவரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை எனவும் அதனால் பல உணர்ச்சிகரமான முடிவுகளை எடுத்துவிட்டேன் எனவும் என்னிடம் சொன்னார்.

எனக்கு மாணவிகள் தீக்குளிக்கும்போது என் மண்டைக்குள் ஓடிய குறுகுறுப்பு அவருக்கு மேலவளவு சம்பவத்தினால் நடந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. அவரைப்பார்த்து நான் சிரித்துக்கொண்டேன். அவசரப்பட்டு சொந்த வாழ்கையை வீணடித்துவிட்டீர்களே என்று சொன்னேன். என்னைபோல சமூக நிகழ்வுகளில் உணர்ச்சிவசப்பட்டு சொந்த வாழ்கையை இழக்கின்ற இன்னொரு நபரிடம் பேசிக்கொண்டிருகிறேன் என்று உணர்தேன்.

29.1.2009 அன்று இலங்கை பிரச்சனை போர் நிறுத்தம் சம்பந்தமாக முத்துக்குமார் என்ற நண்பர் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிர்துயாகம் செய்து மிகப்பெரிய உணர்ச்சி கொந்தளிப்பை அந்த நேரத்தில் ஏற்படுத்தினர். அந்த காலகட்டத்தில் எனக்கு திருமணம் ஆகியிருந்தது முன்பு போல் சமூக நிகழ்வுகளில் அதிக உணர்ச்சிவசப்படுவது குறைந்திருத்தது. அப்போது முத்துக்குமார் தியாக சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் முத்துக்குமார் தம்பி இப்படி அவசரப்பட்டுவிட்டானே என்று நினைத்து அவனை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவனுடைய வெந்த உடலை பார்த்ததில் நொந்துபோனேன்.

 முத்துக்குமாரின் தன்னுடைய மரண வாக்குமூல கடிதத்தை படித்தபிறகு அவன் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. மிகச்சரியான தெளிவு, மிகச்சரியான சமூகத்தை பற்றிய பார்வை சமூகத்திற்காக மரணத்தை கூட விரும்பி ஏற்றுகொள்கின்ற அவனுடைய முதிர்ச்சியான மனப்பக்குவம் என்னை வேர் வரை சென்று ஆட்டிப்பார்த்தது.

என்னால் இப்படி செய்ய முடியுமா? நிச்சயம் என்னால் முடியாது அவரைப்போல் தியாகம் செய்துகொள்ள எனக்கு மனப்பக்குவம் இல்லையென்று ஒப்புமைப்படுத்தி கொண்டு அவருடைய இறுதி ஊர்வலம் கூட்டத்திற்கு ஆயிரகணக்கான மக்கள் இடையில் நானும் அழுதுகொண்டே அஞ்சலி செலுத்தினேன். தேவையான விஷயம் உண்மையான நன்மைக்கு என்றால் பிறருக்காக தன் உயிரையே ஆயுதமாக்கக்கூடிய துணிவு எந்த ஒரு ஆண் மகனுக்கும் தேவை என்ற மனபக்குவத்தை முத்துக்குமார் எனக்குள் விதைத்துச்சென்றார்.முத்துக்குமார் மரணம் அரசியல் ஆக்கப்பட்டது மற்றும் இலங்கை போர் ஒட்டு மொத்த முடிவிற்கு வந்ததிற்கு பிறகு ஒட்டுமொத்தமாக சமூக அரசியல் பயணத்தில் இருந்து என்னை விலக்கிக்கொண்டு முழுவதுமாக தொழில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி படுகொலையும் அது சம்பந்தப்பட்ட சாதி, மத, பெண்ணிய சலசலப்பு செய்திகளை அடுத்து ராம்குமார் என்ற மாணவன் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டான் என்று காவல் துறையால் கைது செய்யப்பட்டான் என்று செய்தி பத்திரிக்கையில் வந்தததை படித்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி என் மனைவியிடம் சொன்னேன் இந்த பையனை கொன்றுவிடுவார்கள் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது என்று சொன்னேன். அதேபோல் மின்சாரம் தாக்கி சிறைக்குள்ளே இறந்தான் என்ற செய்தி அறிந்தேன். பல குற்றங்கள் செய்தவர்கள் எதிரிக்கு பயந்து சிறைக்கு சென்றுவிடுவார்கள் சிறை அவ்வளவு புறப்பாதுகாப்பு சூழலை தரும். நானும் சென்னை புழல் சிறையில் அரசியல் போராட்டங்களுக்காக பலமுறை கைதுசெய்யப்படுள்ளேன். 18 நாட்களுக்கு மேல் சென்னை புழல் சிறையில் இருந்திருக்கிறேன்.

அந்த சிறையின் அமைப்பு அங்கு மின்சாரம் தாக்கி இறக்கக்கூடிய வாய்ப்பு, அங்கு இருக்கும் சிறை விதி அனைத்தும் புரிந்திருந்ததால் நிச்சயமாக ராம்குமார் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று இன்னும் என் உள்ளுணர்வு சொல்கிறது.
ராம்குமார் மரணம் என் பக்கத்து வீட்டு பையன் இறந்தது போல உணர்ந்தேன் அவன் வீட்டு தெருவில் பல முறை பயணித்து இருக்கிறேன்.நான் அதிகம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

என்னை போன்ற கடைசி நிலை மக்களுக்கும் மேலதட்டு மக்களுக்கும் ஒரு பிரச்சனை என்றால் இந்த அரசு இயந்திரம் கடைசி நிலை மக்களுக்காக நிற்காது. இது நமக்கான அரசு இயந்திரம் அல்ல என்று ஓங்கி என் காதுகளில் ஒலித்தது, ஒலித்துகொண்டிருந்தது.

யாரையும் நம்பாதே உனக்கான சாம்ராஜியத்தை நீ உருவாக்கிகொள் என்று ஆழ்மனது கூறிக்கொண்டே இருக்கிறது.
மேற்படி 3 நிகழ்வுகளும் என் சிந்தனைகளில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது சமூகத்தை பற்றியும் என்னுடைய பங்களிப்பு பற்றியும் முடிவு எடுக்க துணையாக இருந்தது.

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்