ஆன்லைனில் பத்திரபதிவு செய்வது எப்படி?

412773b21f7de3c25e13e918e1ba2f87

  ஆன்லைனில் பத்திர பதிவு செய்யும் விவரங்களை தம்பி பிரதீப் அவர்களிடம் விரிவாக ஒரு கட்டுரை தரும்படி கேட்டு இருந்தேன்.நிச்சயம் சாதாரண மக்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும்.இதோ அதனை என் BLOG இல் பகிர்கிறேன்.

பத்திரபதிவு

இதற்கு முன்பாக பத்திர பதிவைப்பற்றி ஒரு வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்து கொண்டிருந்த வழிமுறையை மாற்றி நமது அரசு 12.02.2018 அன்று பதிவுத்துறை சார்பில் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்ட்த்தினையும் அதற்கான புதிய இணைதளத்தையும் (www.tnreginet.gov.in)தொடங்கி வைத்தார்கள். இதில் பொதுமக்களுக்கான சேவை கணிசமான அளவு குறைவதோடு வெளிப்படை தன்மையும் அதிகரிக்கிறது. ஆவணபதிவு செய்யும் நேரத்தை இணையவழி முன்பதிவு செய்து நேரமின்றி சரியான நேரத்தில் சார்பதிவகத்தில் வந்து பத்திர பதிவை முடிக்கும் வசதி. ஒரே வருகையில் ஆவணங்களை பதிவு செய்து உடனுக்குடன் முடிக்கும் வசதி, பொதுமக்களுக்கு சேவைகளின் நிலைகளை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கும் வசதி, தற்போது நடைமுறையில் உள்ள பட்டா மாறுதல் படிவம் கணிணிமயமாக்கப்பட்டு ஆவணப்பதிவுக்குப்பின் பட்டா மாறுதல் விவரங்களை இணையவழி மூலம் வருவாய்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி அதற்கான ஒப்புகைச் சீட்டை கொடுக்கும் வசதி, ஆவணப்பதிவின் போது மோசடி பத்திரங்களை குறைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு தற்போதைய ஆவணப்பதிவின் போது முன் ஆவணப்பதிவின் போது பெறப்பட்ட சொத்தின் உரிமையாளரின் கைரேகையை ஒப்பீடு செய்து பார்க்கும் வசதி, போன்ற பல்வேறு தரப்பட்ட சேவைகளை பொது மக்களுக்கு எடுத்து செல்வதில் பதிவுத்துறை தங்களின் பெரும் பங்களிப்பை பெரிதும் காட்டுகிறது. தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள ஆன்லைனின் எவ்வாறு பத்திரப்பதிவை செய்வது என கீழே காண்போம்..

ஆன்லைனில் பத்திரபதிவு செய்வது எப்படி?

1. www.tnreginet.gov.in என்ற வெப்சைட்டில் ஒரு கணக்கை தொடங்கி அந்த கணக்கின் மூலமாக உங்கள் User name and Password ஐ குறியீட்டு Login செய்து கொள்ளவும்.

2. உள்நுழைவு

 செய்து திரையில் தோன்றும் இரண்டாம் தலைப்பை கிளிக் செய்ததும் கீழே உள்ள படத்தில் தோன்றியவாறு நான்கு Sub Title இருக்கும், அதில் “வரைவு ஆவணத்திற்கான சுருக்கம் ” என்ற தலைப்பை கிளிக் செய்து கொள்ளவும்.

3. அதை கிளிக் செய்ததும் திரையில் தோன்றியவாறு “ஆவணத்தின் தன்மை” மற்றும் “முந்தைய ஆவணத்தின் விவரம்” என்ற இரண்டை பூர்த்தி செய்த பிறகே தொடர்ந்து செயல்படுத்த தொடர்க என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

ஆவணத்தின் தன்மை :

இந்த பகுதியானது நீங்கள் எங்கள் எந்த வகையான ஆவணத்தை பதிவு செய்ய தாக்கல் செய்கீறிர்கள் என்று அந்த ஆவண வகையை தெரிவு செய்யவும். அதாவது கிரயம், பாகப்பிரிவினை ஆவணமா, தானசெட்டில்மென்ட் ஆவணமா என்பதை குறியூடு செய்யவும். அந்த பகுதியில் எல்லா வகையான ஆவணத்தின் தலைப்புக்களும் அடங்கி இருக்கும் எனவே தலைப்புக்களை முதலில் புரிந்து கொண்ட பிறகே நீங்கள் பதிவு செய்ய விரும்பும் ஆவணத்தை தெரிவு செய்யவும். ஏனென்றால் தானசெட்டில்மெண்ட் ஆவணத்தை ஒரு சிலர் அதில் இருக்கும் தான ஆவணம் என்ற தலைப்பை தெரிவு செய்கீறார்கள் ஆனால் அதற்கு ஏற்பாடு செட்டில்மெண்ட் என்ற தலைப்பே பொருந்தும்.

முந்தைய ஆவணத்தின் விவரம் :

இந்த பகுதி நீங்கள் புதியதாக பதிவு செய்யக்கூடிய ஆவணத்தின் சொத்தானது எந்த ஆவணத்தின் மூலம் பாத்தியம் (Parent Doc No) என்று அந்த ஆவணத்தின் எண், வருடம், அதன் சார்பதிவகத்தை குறியீடு செய்யவும். ஒரு வேலை நீங்கள் பதிவு செய்யும் ஆவணத்தின் சொத்தானது பட்டா மூலம் பாத்தியம் அல்லது ஊர் நத்தம் மூலம் பாத்தியம் எனில் முந்தைய ஆவணத்தின் விவரத்தினை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தாக்கல் செய்ய விரும்பும் ஆவணத்தின் சொத்தானது பத்திரம் மூலம் பாத்தியம் எனில் கண்டிப்பாக ஆவணத்தின் விவரத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.



4. தொடர்ந்து செயல்படுத்த தொடர்க என்ற பொத்தானை கிளிக் செய்தவுடன் ஆவணத்தின் தன்னைக்கு ஏற்றவாறு அதன் Sub Title தோன்றும் . அதில் முதல் இரண்டு Sub Title மற்றும் எல்லா வகையான ஆவணத்திற்கும் பொதுவானவை எனவே அதை இந்த Write up ல் தெளிவாக கூறுகிறேன்.

1. கட்சிக்காரர்களின் விவரம்
2. சொத்து விவரங்கள்

I. கட்சிக்காரர்களின் விவரம் :

இது பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது.

1. சொத்து விற்பவரின் விவரம் (பெயர், முகவரி, அடையாள அட்டை எண்) . ஒரு வேளை ஒன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள் சொத்தின் உரிமையாளராக இருப்பின் கீழே சேர்க்க என்ற பொத்தானை கீளிக் செய்து அனைத்து உரிமையாளரின் பெயரையும் இடம் பெற செய்ய வேண்டும்.

2. சொத்து வாங்குபவரின் விவரம் (பெயர், முகவரி, அடையாள அட்டை எண், கைப்பேசி எண்). இங்கே நீங்கள் குறிப்பிடும் கைப்பேசி எண்ணிற்கு OTP என்று குறுஞ்செய்தி நம்பர் கிடைக்க பெறும் அதை பூர்த்தி செய்த பிறகே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும். இது மிக முக்கியமான ஒரு விஷயம் ஏனென்றால் பத்திரத்தின் நிலைப்பாடு அனைத்தும் குறுஞ்செய்தி வாயிலாக நாம் அறியலாம் . ஆனால் ஆன்லைனில் ஏற்றும் பொழுது வாடிக்கையாளர்கள் அருகில் இல்லாத சூழ்நிலையால் ஒரு சில ஆவண எழுத்தர்கள் அவர்களுடைய மொபைல் எண்ணை குறியீடுகிறார்கள் இது மிகவும் தவறு.

3. சாட்சிகள் விவரம் (2 சாட்சிகளின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி)

4. பிரதிநிதிகளின் விவரம் – பவர், மைனர்க்கு கார்டியன் நியமித்தல். போன்ற பகுதிக்கு மட்டுமே இது கட்டாய பகுதி மற்ற நிலைப்பாட்டிற்கு இது ஒரு விருப்ப பகுதி மட்டுமே.

5. தாக்கல் திரும்ப பெறுபவரை நியமித்தல் – பத்திரத்தை திரும்ப அளிப்பதற்கான நபரை தெரிவு செய்தல்.


II. சொத்து விவரங்கள் :
இந்த பகுதி ஆவணத்தின் ஒரு உடல் என்று கூறலாம். இந்த பகுதியில் நாம் தெரிவு செய்யும் விவரமே வில்லங்க சான்றிதலில் முழுக்க முழுக்க இடம் பெறும்.

முதலில் நாம் பதிவு செய்யும் சொத்தின் வகையை தெரிவு செய்து கொள்ளவும். அதாவது விவாசய நிலமா, மனையா, அடுக்குமாடி குடியிருப்பா, மனையும் கட்டிடமா (வீடு) என நாம் பதிவு செய்யும் சொத்துக்கு ஏற்றவாறு அதன் தன்னையை தெரிவு செய்யவும். இதை பொருத்தே அதற்கு பிறகு வரும் Sub Title மாறுபடும். முற்பகுதியில் Parent Document ஐ இணைத்து இருந்தால் அந்த சொத்து விவரத்தினை நகல் செய்யவும் என Option தோன்றும் ஆனால் அதை உபயோக படுத்தாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால பழைய தவறுகளை குறைக்கலாம்.



சொத்து விவர வகைப்பாட்டை தெரிவு செய்து சேர்க்க என்ற பட்டனை தெரிவு செய்ததும் கீழே கொடுக்கப்பட்டவாறு Sub Title தோன்றும். ஒவ்வொரு பகுதியையும் பூர்த்தி செய்து அடுத்து பட்டனை கிளிக் செய்யவும்,

1. சொத்து விவரம்
2. புல விவரங்கள்
3. எல்லை விவரங்கள்
4. சொத்தின் அளவுகள்
5. கட்டிடத்தின் அளவுகள்
6. சொத்து விவரக்குறிப்புகள்
7. சொத்து விவர இனங்கள்

II. சொத்து விவரம் :
இப்பகுதியில் உங்கள் சொத்து எந்த சார்பதிவகம், கிராமம் என்ற விவரத்தினை தெரிவு படுத்தவும், ஒரு வேலை நீங்கள் முற்பகுதியில் Parent Document ஐ இணைக்காமல் இருந்தால் அந்த சொத்திற்கான பட்டா எண்ணை இணைப்பு செய்த பிறகே அடுத்த விவரத்திற்கு செல்ல முடியும்.


2. புல விவரங்கள் :

புல எண், சொத்தின் அளவு. அதற்கான சந்தை மதிப்பு, அலகு (விவசாய நிலம் எனில் ஏக்கர்/ஹெக்டர் , மனையாக இருப்பின் சதுரமீட்டர்/சதுரடி என்றவாறு அலகு தோன்றும்).நாம் பதிவு செய்யும் விரும்பும் சொத்தின் சர்வே எண் அதில் மாற்றப்படும் வீஸ்தீரணத்தின் அளவு, அந்த அளவிற்கு சந்தை மதிப்பை நிரப்பவும் . சந்தை மதிப்பைக் காண முதல் திரையில் வழிகாட்டி மதிப்பு என்ற பகுதியில் உங்கள் கிராமம், ச.எண் தெரிவு செய்து அதற்கான மதிப்பினை தெரிந்து கொள்ளலாம். கிராம நத்தமாக இருப்பின் அதற்கான பழைய சர்வே என்ணை தெரிவு செய்யவும் .ஒரு வேலை உங்கள் சொத்திற்கான ச.எண் இல்லாத பட்சத்தில் “காணப்படவில்லை” என்பதை தெரிவு செய்து உங்களது ச.எண்ணை தட்டச்சு செய்து கொள்ளலாம்.

3. எல்லை விவரங்கள் :
உங்களது சொத்தின் செக்குபந்தி விவரத்தை பதிவீடு செய்ய இந்த பகுதி பயன்படும் . அதாவது நீங்கள் வாங்கும் நிலத்தின் நான்கு திசைகளிலும் (கிழக்கு,மேற்கு, வடக்கு, தெற்கு) யாருடைய நிலம் உள்ளது அதற்கான சர்வே எண்ணை இந்த பகுதியில் குறிப்பிடலாம். இதில் “முறையான எல்லை” மற்றும் “முறையற்ற எல்லை” என இரண்டு தெரிவு செய்யும் பகுதி இதில் இடம்பெறும். இந்த பகுதியானது பெரும்பாலும் மனை பகுதிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கும். ஏனெனில் முறையான எல்லை என்றால் சொத்தின் நீளம் மற்றும் அகலம் என இரண்டும் ஒரே அளவாக இருப்பின் (22*32 = 704 சதுரடி) இந்த எல்லையை குறியீடு செய்யலாம். முறையற்ற எல்லை என்றால் நான்கு திசைகளிலும் வெவ்வெறு அளவாக இருப்பின் (12*23*32*41 ) இந்த எல்லையை குறியீடு செய்யலாம்.


சொத்தின் தன்மை மனையாக இருப்பின் இந்த பகுதியானது ஒரு கட்டாய பகுதி, விவசாய நிலமாக இருப்பின் இது ஒரு Optional பகுதி மட்டுமே.

4. சொத்தின் அளவுகள் :
இது மனைப்பகுதிக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு தலைப்பு ஆகும், அதாவது உங்கள் மனையிடத்தின் நீளம் மற்றும் அகலம் அளவு முறையை குறிக்கும் பகுதி ஆகும்.

.
5. கட்டிடத்தின் அளவுகள் :
இந்த பகுதியானது “மனையும் கட்டிடமும்” என்ற பகுதியை தெரிவு செய்யும் போது மட்டுமே இந்த தலைப்பு தோன்றும். அதாவது ஒரு கட்டியிருக்கும் வீட்டை பதிவு செய்ய விரும்புகீறீர்கள் என்றால் இந்த தலைப்பை தெரிவு செய்து அதில் இடம் பெற்று இருக்கும் கட்டாய தகவலை மட்டும் தெரிவு செய்ய வேண்டும். அதாவது கட்டிடத்தின் கதவு எண். மின் இணைப்பு எண், கட்டிடத்தின் மதிப்பை தெரிவு செய்தல் என கட்டாயம் ஆக்கப்பட்ட பகுதியை மட்டும் பூர்த்தி செய்து அடுத்த பகுதிக்கு செல்லலாம். கட்டிடத்தின் மதிப்பை தெரிவு செய்தலில் வரும் மதிப்புக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ மட்டுமே மதிப்பை நாம் நிரப்ப இயலும் அதற்கு குறைவான மதிப்பை நம்மால் நிரப்ப இயலாது.

6. சொத்து விவரக்குறிப்புகள் :
இந்த பகுதியில் நாம் மேனுயுலாக சில கண்டிஷன் வார்த்தைகளை தட்டச்சு செய்து கொள்ளலாம். அதாவது “போக வர உண்டான மாமுல் வழி பாத்தியம்”, “நிலத்தில் பைப் லைன் எடுத்து செல்லும் பாத்தியம் என உங்கள் சொத்திற்கு ஏதாவது “கண்டிஷன்” செய்ய விரும்புகீறார்கள் என்றால் அதை இந்த பகுதியில் தட்டச்சு செய்யலாம்

7. சொத்து விவர இனங்கள் :
மரங்கள், கிணறு, மின்மோட்டார் பம்பு செட் போன்றவற்றை தெரிவு செய்து அதற்கான மதிப்பை உள்ளீடு செய்ய இந்த பகுதி உதவும்.
III. அடுத்த பகுதி ஆவணத்திற்கு ஏற்றவாறு மாறுபடும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஏற்றவாறு அடுத்தும் எழுதும் பொழுது தெளிவாக கூறுகிறேன். இந்த பகுதியில் கிரய ஆவணத்தின் தலைப்புகளை மட்டும் விவரிக்கிறேன்.

IV. கைமாற்றுத் தொகை:
கைமாற்றுத் தொகையானது சந்தை மதிப்பிற்கு நிகராகவோ அல்லது அதற்கு குறைவாகவோ மட்டும் இருத்தல் வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சந்தை மதிப்பிற்கு அதிகமாக இருத்தல் கூடாது. இந்த மதிப்பானது ஆவணத்தில் இந்த மதிப்புள்ள பணத்தை பெற்றுக்கொண்டு உனக்கு கிரயம் கொடுத்துள்ளேன் என்றவாறு வாசகம் இருக்கும் அந்த வாசகத்தில் இருக்கும் மதிப்பை குறியீட இந்த தலைப்பு உதவும்.

V. உடன்படிக்கை விவரங்கள் :
கிரய பதிவு மேற்க்கொள்வதற்கு முன்பாக கிரய உடன்படிக்கை ஏதேனும் பதிவு செய்து இருப்பின் அதற்கான பதிவு எண் மற்றும் பதிவு செய்த வருடத்தை பூர்த்தி அந்த ஆவணத்தை இணைக்கவும். அவ்வாறு எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லாத பட்சத்தில் Skip செய்து அடுத்து தலைப்பிற்கு செல்லலாம்.

VI. ஆதார விவரங்கள் :
பத்திரபதிவு ஆன்லைனில் அறிமுகம் செய்த நிலையில் இந்த பகுதியில் கட்டாயமாக அடையாள அட்டையை ஸ்கேன் செய்து இணைப்பு செய்யுமாறு இருந்தது ஆனால் தற்போது நடைமுறையில் இணைப்பு செய்ய கட்டாயம் கிடையாது இது ஒரு விருப்பப்குதி மட்டுமே. எனவே Skip செய்து அடுத்து தலைப்பிற்கு செல்லலாம்.

VII. ஆவண மதிப்பீடு :
இது உங்கள் பத்திரத்தின் செலவு தொகையை தீர்மானிப்பது என்றே கூறலாம். நீங்கள் தயாரிக்கும் ஆவணத்திற்கு எவ்வளவு மூத்திரைதீர்வை கட்டணம் செலுத்த வேண்டும், பதிவு கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும். இதர வகையான கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று பில் போட்டு காட்டக்கூடிய பகுதி. கட்டணத்தை சரிபார்த்து “வரைவு ஆவணத்திற்கான சுருக்கம் “ பொத்தானை கிளிக் செய்ததும் உங்கள் ஆவணத்திற்கான தற்காலிக எண் (Temporary Number – TP) உருவாகி விடும், இந்த தற்காலிக எண் தான் நீங்கள் சார்பதிவகத்தில் டோக்கன் போடுவதற்கு. உங்கள் ஆவணத்தை சார்பதிவகத்தில் கண்டுபிடிக்க உறுதுணையாக அமையும்.
இதுவே நீங்கள் ஒரு ஆவணத்தை தயாரிக்கும் வழிமுறையாகும்.


நன்றி,
ம.பிரதீப் மதியழகன், (BE)
பத்திர எழுத்தர்.

குறிப்பு:

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#பத்திரபதிவு  #சொத்து #பட்டா #இணைதளம் #ஆவணம் #மதிப்பீடு #மனை #Optional #ஒப்பீடு  #மூத்திரை #தீர்வை #சர்வே #parent #document  #பவர் #மைனர் #கார்டியன் #online #registration #valuation #computer #internet #asset #deed #document #plot #survey #ec

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்