பெண்களுக்கு சொத்தில் பங்கு வேண்டுமா ? பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!


Property-Rights-of-Women-1

1.சொத்துரிமையை பொறுத்தவரை ஆதி முதல் இன்று வரை வஞ்சிக்கப்பட்டு கொண்டு இருப்பது நம்ம இந்து பெண்கள் தான். இந்து என்றால் ஆரிய பிரா மனர்கள், வீரசைவர்கள், லிங்காயத்துகள், சூத்திரர்கள், புத்த ஜைன சீக்கியர்கள், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ,நாஸ்திகர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்ததே இந்துக்கள் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இந்தியா முழுதும் இருக்கின்ற உதிரி மக்களை இந்துக்கள் என்று ஒருங்கிணைக்க யார் எல்லாம் கிறித்தவர்கள், இஸ்லாம், பார்சி இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்ற சட்ட வரையரைக்குள் கொண்டு வந்தனர். மேற்சொன்ன வரையறைக்குள் இந்து என்று சொல்லிகொண்டு சொத்துகளை வைத்து இருந்தார்களோ அவர்கள் எல்லாம் சொத்துரிமையை. பொறுத்தவரை இந்து பெண்களுக்கு துரோகம் செய்தவர்கள்தான்.

2.இந்து மத வாழ்வியலில். பெண்களுக்கு ஆண்கள் தேவையானதை செய்ய வேண்டிய கடமை மட்டும் அறிவுறுத்தபடுகிறது. பெண்ணை திருமணம் செய்து கொடுத்தல், விதவை என்றால் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுதல் போன்ற கடமை மட்டும் சொல்லப்படுகிறது. கடமைகள் நிறைவேற்றப்பட்டால் உரிமைகள் எழ வாய்ப்பில்லை என்றே இந்துதர்ம கோட்பாடுகள் சொல்கின்றன. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது இந்த கோட்பாடு.ஆனால் ஆண்டிமுதல் அரசன் வரைச, பாமரன் முதல் படித்த ஞானிகள் வரை , சமானியன் முதல் ஆன்மிக பெரியோர்கள் வரை அனைவருமே கடமையில் இருந்து தவறி கொண்டே இருப்பதை நாம் பார்த்துகொண்டே இருக்கிறோம்.

3. மேற்படி கடமைகள் தவறும் போது எழுகின்ற உரிமை குரல்களாலும் தொடர் போராட்டங்களலாலும் கடந்த 100 வருஷமாக சொத்துரிமையை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கிள்ளி கொடுத்து கொண்டு இருக்கின்றனர் இந்து ஆண்கள் .
4. தொடர்ந்து போராடி பெண்களுக்கான சொத்துரிமையில் ஆணுக்கு பெண் இளைப்பில்லாமல் சட்ட வடிவில் முழுமையாக இப்பொழுது கொண்டுவந்தாகிவிட்டது.ஆனால் இன்னும் நிஜ வாழ்வில், களநிலவரத்தில் தன்னுடைய சகோதரர்களிடம் இருந்து சொத்துரிமை பெற இன்னும் ஒரு அரை நுற்றாண்டுகள் ஆகும் என நினைக்கிறேன்.

5.அஸ்ஸாம், வங்காளம், பீகாரின் கிழக்கு பகுதிகள், பஞ்சாப் சிந்து பகுதிகளில் இருக்கின்ற இந்து மக்கள் தயாபாக கொள்கை கொண்டது.நமது தமிழ்நாடு உட்படமீதி உள்ள இந்திய பகுதிகள் மித்தாஷார கொள்கை என இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் வாரிசுரிமையை நிர்ணயிக்கிறார்கள்.
6.கேராளாவின் வட பகுதி – கர்நாடகவின் மங்களுர் பகுதிகளில் வாரிசுரிமைக்காக பிரத்யோக சட்டங்கள் வைத்து இருக்கிறார்கள்என்பதை நினைவில் வைத்து கொண்டால் போதும். தாயாபாக மித்தாஷார வாரிசுரிமை சட்டங்கள் கேரளா- மங்களுர் பிரத்யோக வாரிசுரிமை சட்டங்கள் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

7.இருக்கின்ற சட்டங்களிலேயே அதிக சிக்கல் நிறைந்ததும், சொத்துக்களை பெண்கள் அடைய கூடாது எனவும் யோசித்து யோசித்து சட்டத்தை எழுதி இருக்கின்றனர். கற்பனை பாகபிரிவினை (Notinal Partion) போன்ற கதைகளையும் கோபர்சனரி சொத்து கோபர்சனரி குடும்பம போன்ற பித்தலாட்ட. வரையறைகளையும் இந்த சட்டம் சொல்கிறது.(இன்னொரு கட்டுரையில் இவற்றை எழுதுகிறேன்)

8.பெண்கள் சொத்துகளே வைத்து கொள்ள கூடாது என்ற நிலைதான் 1937க்கு முன்பு வரை இருந்தது. ஏறக்குறைய பெண்களுக்கு “பொருளாராத தடை” என்ற நிலையை அனுபவித்தார்கள்.

9. வெள்ளைகாரர்கள் பெண்கள் சொத்துரிமை சட்டம் – 1937 என்ற சட்டத்தை உருவாக்கி, பெண்கள் சொந்தமாக சொத்து வைத்து கொள்ளலாம் அவை வாங்கிய சொத்தாகவோ,சீதன சொத்தாகவோ, இருக்கலாம். ஆனால் நிச்சயமாக பூர்வீக சொத்துகளில் உரிமை இல்லை என்ற அந்த சட்டம் சொல்லிற்று.

10.ஒரு இந்து ஆண் இறந்து விட்டால் அவரின் சொத்துக்கள், அவரின் மகன் & பேரன்களுக்கு போய் சேரும். மகளுக்கு பங்கு இல்லை. ( சீதனமாக கொடுத்தால் வைத்து கொள்லாம். விதவை மனைவி சொத்து எதுவும் இல்லை. ஆனால் இறந்த கணவன் பேரில் ஒரு பங்கு பிரிக்கப்பட்டு அது விதவை மனைவிக்கு கொடுக்கப்படும். அதில் அவர்கள் வாழ்ந்து கொள்ளலாம். விவசாய நிலம் என்றால் பாடுபட்டு கொள்லாம்.ஆனால் அந்த சொத்து செத்து போன கணவன் பேரிலே இருக்கும். அதாவது சொத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கலாம். சொத்தை விற்கவோ தானம் செய்யவோ கூடாது. மேற்படி விதவை இறந்த பிறகு சொத்து மீண்டும் மகன்களுக்கு திரும்பிவிடும்.

11.1937 க்கு பிறகு சொத்து வைத்து கொள்பவரும் அது வாங்கிய தனி சொத்து சீதன சொத்தாக இருக்கலாம். ஆனால் பூர்விக சொத்தில் பெணகளுக்கு் மனைவி என்று சொன்னாலும் கல்யாணமாகாத மகள் என்று சொன்னாலும். கல்யாணம்ஆன மகள் என்று சொன்னாலும். விதவை மனைவி, விதவை மகள் என்று சொன்னாலும் பூர்விக சொத்திலும், வாரிசு அடிப்படையில் தம்புடிகாசு கூட பங்கு கேட்க முடியாது. அதனால் தான் 1937 சட்டத்தில் பேண்களுக்கு வாரிசுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை.

12.1947 ஆம் ஆண்டு இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்து நாட்டுக்கு உழைத்த உத்தமர் எல்லாம் நாட்டை ஆள போன பிறகும் பெண்களுக்கு வாரிசுரிமையின் அடிப்படையில் சொத்து வேண்டுமே என்று நினைத்து பார்க்க கூட நேரம் இல்லாமல் இருந்தனர்.

13. ஆனல் பாபா சாஹேப், தந்தை பெரியார் ஆகிய இரண்டு தலைவர்கள் மட்டும் பெண்களுக்கு சொத்தில் வாரிசுரிமை வேண்டும் என்று எழுதியும் பேசியும் போராடிகொண்டும் இருந்தனர், பாபா சாஹேப் இந்திய அரசியல் சட்டம் இயற்றும் போது கூட பெண்கள் வாரிசுரிமையில் திருத்தம் எதுவும் செய்யாதவாறு பிற சட்ட எழுதும் குழு உறுப்பினர்கள் பார்த்து கொண்டார்கள்.

14.நல்ல தலைவர்களினாலும் பெண்ணியவாதிகளினாலும்,முற்போக்குவாதிகளின் தொடர் போரட்டத்திற்கு பிறகு 1956ல் பெண்கள் சொத்துரிமை சட்டம் புதிய திருத்தத்தை கொண்டு வருகிறது. பெண்களுக்கான உரிமைக்கான வரலாற்று சட்டம் என்று எல்லாம் எழுதி இருக்கிறார்கள் சட்ட வித்வான்கள். இந்த சட்டத்தையும்ஆராய்ந்து பார்த்தால் இதுவும் பெண்களுக்கு எதிரான பித்தலாட்டாம்தான்.

15. 1956 சட்டம் பெண்கள் வாரிசுரிமையை என்று ஏற்றுகொண்டு விட்டது. ஆனால் அவ்வாரிசு உரிமைப்படி தனி சொத்தை அடைய முடியும். பூர்வீக சொத்தை அடைய முடியாது என்று அங்கு ஒரு தடை விதித்தது.

16. ஒருவர் இறந்த பின்பு அவர் சொந்தமாக வாங்கிய சொத்து, அவருக்கு பூர்விகமாக கிடைத்தது. சொத்து என இரண்டு சொத்துக்கள் இருக்கும். இதில் சொந்தமாக வாங்கிய சொத்தில் பெண்களுக்கு வாரிசுமை உண்டு.பூர்விக சொத்துக்குள்ளும் ஒரு தனி சொத்து இருக்குன்னு 1956 சட்டம் கண்டுபிடிச்சி சொன்னது.

17. அது என்னவென்றால் பூர்வீகச் சொத்தை விட்டுவிட்டு ஒரு இந்து ஆண் (தகப்பன்) இருந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவியும்,ஒரு மகன் ஒரு மகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது, இந்த 1956 சட்டம் இவர் இறப்பதற்க்கு முன்னர், இவருக்கும் (தகப்பனுக்கும்) அவரின் இரண்டு மகன்களுக்கும் ஒரு பாகப் பிரிவினை (கற்பனையாக) நடக்கும்;அதில் தகப்பனுக்கு ஒரு பங்கு,இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு பங்கு; ஆக மூன்று பேருக்கும் மூன்று பங்காக அந்த சொத்து அல்லது சொத்துக்கள் பிரியும். (அசையும் சொத்து, அசையாச் சொத்து எல்லாமே). இந்த கற்பனைப் பாகப்பிரிவினைப்படி,இறந்தவருக்கு (தகப்பனுக்கு) ஒரு பங்கு கிடைக்கிறது. அந்த பங்கு சொத்து “பூர்வீகச் சொத்து” கிடையாதாம். அதாவது அது இறந்தவரின் “தனிச் சொத்தாம்”. அந்த சொத்தை அவரின் மனைவியும், மகளும் அந்த மகனும் ஆக 3பேரும் தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்ளலாம்.

18.அதாவது ஏற்கனவே கற்பனை பாகப் பிரிவினையில் 1/2பாகமாக பிரிந்துள்ளது. அந்த தகப்பனின் 1/2பாகத்தை மறுபடியும் 1/3 ஆக பிரிக்க வேண்டும். அடடா எப்படி அயோக்கியதனமா யோசிச்சி இருக்காங்க !

19.தனி சொத்தில் பங்கு உண்டு பூர்வீக சொத்தில்தான் பங்கு இல்லை என்று சொல்கிறது 1956 சட்டம், ஆனால் நம்ம ஆண் வர்க்கமோ பெண்களிடம் பூர்வீக சொத்தில் பங்கில்லை என்று சொல்லாமல் பூவீகத்தை மறைத்துவிட்டு சொத்தில் பங்கில்லை சொத்தில் பங்கில்லை என்று சொல்லி தனிசொத்தில் கூட பங்கு தராமல் ஏமாற்றி வந்தனர். பெண்களும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை நம்பி சொத்துக்களை உரிமை கோராமலே இருந்துவிட்டனர்.

20.படித்த அதுவும் சட்டம் தெரிந்த பெண்களுக்க மட்டும் தனி சொத்தில் வாரிசுரிமை பங்கு உண்டு என்று தெரிந்து இருந்தது.

21.தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் காலத்தில் பெண் சொத்துரிமை சட்டம் 1956 ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு வாரிசு உரிமைப்படி தனி சொத்தில் வாரிசுகளுடன் எப்படி சமபங்கோ அது போல பூர்வீக பொது குடும்ப சொத்திலும் சமபங்கு என்று சட்டமியற்றியது.

22.அன்று முதல்தான் தமிழத்தில் ஆணும், பெண்ணும், சொத்துரிமையில் சமம் என்று நிறுவப்பட்டது.தாத்தா சொத்துக்களில் பிறந்தவுடன் உரிமையாளராக ஆண் குழந்தைகள் ஆவதால் அவனை சிங்கம் என்றும் இளவரசன் என்றும் வளர்த்தார்கள்.பாராட்டி சீராட்டினார்கள். தாத்தா சொத்துகள் பெண் குழந்தைகளுக்கு வராததால் பெண் குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்ட வரலாறு நமக்கு தெரியும். 1989 சட்டத்திற்கு பிறகுதான் அவைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து இருக்கிறது.

23.2005- ல் வடக்கில் இருக்கிற அறிவு ஜீவி தலைவர்கள் எல்லாம், தமிழ்நாடு அரசு போட்ட சட்டம் போல் இந்தியா முழுவதும் திருத்தி சொத்துரிமை சட்டம் 2005 என்று கொண்டு வந்தார்கள்.

24.1989ம் ஆண்டு தமிழ் நாட்டு பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு என்று சட்டம் போட்டதும். அனைத்து சகோதரிகளிடம் இருந்து சொத்துக்களை விடுவிக்க விடுதலை பத்திரம் நிறைய நடக்க ஆரம்பித்துவிட்டது.மேலும் அண்ணன் தம்பி எல்லாம், உடன் பிறந்த சகோதரிகளை கொஞ்சமாவாது மதிக்கனும் என்ற நிலைக்கு வந்தனர்.

25. 1989 க்கு முன் திருமணமான பெண்களுக்கும்,1989 க்கு முன்பே பாகப்பிரிவினை போடப்பட்ட பூர்வீக சொத்துகளில் பெண்களுக்கு் வாரிசு உரிமைபடி அந்த சொத்தில் பங்கில்லை. இல்லை.

26.1937 க்கு முன் சொத்தே வைத்து இருக்க கூடாது.1937 க்கு பிறகு வெள்ளையனால் பெண்கள் சொத்து வைத்து இருக்கலாம் என்று சட்டம். இதன்படி சீதன சொத்து அல்லது சொந்தமாக வாங்கி வைத்து கொள்ளலாம் ஆனால் வாரிசுரிமைபடி சொத்தில் பங்கு கிடையாது.1956 ல் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு ஆனால் அது தனிசொத்துக்கு மட்டுமே பூர்வீக சொத்தில் வாரிசுரிமை கிடையாது.1989 ல் பூர்வீக சொத்தில் வாரிசுரிமை உண்டு என்று சட்டம் இயற்றபட்டது.15 வருஷம் கழித்து 2005 ல் இந்தியா முழுதும் பூர்வீக சொத்தில் வாரிசுரிமையை அமுல்படுத்தபட்டது.

27.தமிழ்நாட்டின் பெண்களுக்கான சொத்துரிமையை பொறுத்தவரை பிராமண பெண்களானாலும் மற்ற சாதிஇந்து பெண்களானாலும் பிற இந்து பெண்களானாலும் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டியது தந்நை பெரியாருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் தான்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சொத்துரிமை  #பஞ்சாப் #பெண்கள் #பெரியார் #கருணாநிதி #வாரிசுரிமை #சட்டம் #பாகப்பிரிவினை #Notinal #Partion #பங்கு #கேராளா #பூர்வீகம் #asset #panjab #partition #karunanithy #periyar #law #kerala #share

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்